12 வயதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி பிரதமர் மோடியுடன் நேரில் சந்திப்பு


12 வயதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவி பிரதமர் மோடியுடன் நேரில் சந்திப்பு
x

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருங்காலத்தில் வரவேண்டும் என்பது தனது விருப்பம் என பிரதமர் மோடியிடம் மாணவி தனிஷ்கா சுஜித் கூறியுள்ளார்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்த மாணவி தனிஷ்கா சுஜித் (வயது 15). இவர் தனது 11-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். 12-வது வயதில் 12-ம் வகுப்பு தேர்வையும் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இதற்காக அவரது பெயர் ஆசிய சாதனைகள் புத்தகம் மற்றும் இந்திய சாதனைகள் புத்தகம் ஆகியவற்றில் இடம் பெற்று உள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடியை, தனிஷ்கா தனது தாயார் அனுபா அவஸ்தியுடன் இன்று நேரில் சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், எம்.பி.க்கள் சங்கர் லால்வானி மற்றும் மயூர் சேத்தி ஆகியோரும் உடன் இருந்தனர். இந்தூரின் வளர்ந்து வரும் மாணவியின் ஒவ்வொரு வளர்ச்சிக்கான சாத்தியப்பட்ட விசயத்திலும் பங்காற்றும்படி லால்வானியிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

இதன்பின்பு, மாணவி தனிஷ்கா சுஜித்திடம் திரும்பிய பிரதமர் மோடி, வருங்கால இலக்குகள் என்னவென்று? கேட்டார். அதற்கு தனிஷ்கா, வருங்காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வரவேண்டும் என்பது தனது விருப்பம் என பதிலளித்து உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனிஷ்காவின் தந்தை உயிரிழந்த நிலையில், மனந்தளராமல், படிப்பை தொடருகிறார். தேவி அகல்யா பல்கலை கழகத்தில் பி.ஏ. எல்.எல்.பி. படிப்பை தொடர்ந்து வருகிறார். 15 வயதில் பட்டப்படிப்பு முடித்த இளம் மாணவி என்ற பெருமையையும் அவர் பெற இருக்கிறார்.

கண்களை கட்டி கொண்டு, கியூப்களை ஒன்று சேர்க்கும் திறமையை கொண்டிருக்கிறார். கதக் நடன கலைஞராகவும் தனிஷ்கா உள்ளார். இதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நடன நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு நாடு திரும்பி உள்ளார்.


Next Story