கர்ப்ப காலத்தில் மரணம் அடையும் பெண்களின் விகிதம் சரிவு; மத்திய சுகாதார மந்திரி
கர்ப்ப காலத்தில் மரணம் அடையும் பெண்களின் விகிதம் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார மந்திரி புள்ளி விவர பட்டியல் வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள செய்தியில், 2011-13ம் ஆண்டில், தாய்மையடையும்போது ஏற்படும் மரண விகிதம் 167 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2017-19-ம் ஆண்டில் 103 என வெகுவாக சரிவடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இந்த இறப்பு விகித எண்ணிக்கையானது, 1992-93-ம் ஆண்டில் 437 ஆகவும், 2001-03-ம் ஆண்டில் 301 ஆகவும் இருந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது 1 லட்சம் குழந்தை பிறப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளது.
இதற்கு பிரதம மந்திரியின் சுரக்சித் மத்ரித்வா அபியான் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா மற்றும் லக்சயா உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் வழிவகுத்துள்ளன. இதன்படி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உதவி தொகை வழங்குதல், மருத்துவ சேவை அளித்தல் உள்ளிட்ட பயனுள்ள விசயங்கள் கர்ப்பிணிகளை சென்றடைந்துள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.