குட்டி புலியை, பெரிய புலி தாக்கி கொன்ற வீடியோ வைரல்
தாயை இழந்த குட்டி புலியை, பெரிய புலி ஒன்று தாக்கி கொன்ற வீடியோ வைரலாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
மைசூரு:-
குட்டி புலி
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவை சேர்ந்த நாகரஒளே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது தாரகா அணை. இந்த பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதே நேரம் பிற வன விலங்குகளும் நடமாடி வருகிறது. இந்நிலையில் வேட்டைக்காரர்கள் சிலர் இந்த வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வலை வைத்திருந்தனர். இந்த வலையில் கடந்த 12-ந் தேதி 3 குட்டிகளுடன் வந்த தாய் புலி சிக்கி உயிரிழந்தது.
இதையடுத்து அந்த 3 குட்டிகளும் அனாதையாக சுற்றித்திரிந்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த குட்டிகளில் ஒன்று வனப்பகுதியில் செத்து கிடந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பெரிய புலி தாக்கி செத்தது
அதில் உயிரிழந்த குட்டி புலி, பெரிய புலி ஒன்றுடன் சண்டையிட்டுள்ளது. அந்த சண்டையில் பெரிய புலி, குட்டி புலியை தாக்கி கொன்ற வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த பெரிய புலி அங்கிருந்து வனப்பகுதிகள் ஓடிவிட்டது. அதேபோல இந்த புலி குட்டியுடன் வந்த பிற குட்டிகள் தப்பியோடிய காட்சிகளும் வனத்துறையினருக்கு கிடைத்தது.
இதையடுத்து அந்த புலி குட்டிகளை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் செத்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் குழிதோண்டி வனத்துறையினர் புதைத்தனர். இந்த சம்பவத்தால் நாகரஒளே மற்றும் தாரகா அணைப்பகுதியின் அருகேயுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.