கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது மோசடி வழக்கு பாய்கிறது


கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது மோசடி வழக்கு பாய்கிறது
x
தினத்தந்தி 4 Dec 2022 2:38 AM IST (Updated: 4 Dec 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருூ/

6 பிரிவுகளில் வழக்கு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அம்ருத்பால் மீது பெங்களூரு முதலாவது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் 1,406 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அம்ருத்பால், அரசு அதிகாரி என்பதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி. போலீசார் அரசின் அனுமதி கேட்டு இருந்தனர். இந்த நிலையில் அம்ருத்பால் மீது வழக்கு தொடர அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அம்ருத்பால் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120-பி(குற்றத்திற்கு சதி திட்டம் தீட்டுதல்), 409(அரசு அதிகாரியாக இருந்து கொண்டு நம்பிக்கை துரோகம் செய்தல்), 420(மோசடி) உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது அம்ருத்பாலுக்கு கூடுதலாக நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மனுவை குப்பையில் போட கூறிய அம்ருத்பால்

இந்த நிலையில் ஆள்சேர்ப்பு முறைகேடு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு (நவம்பர்) மாதம் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடக்க இருப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் 12 பேர் அம்ருத்பாலை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.

இதுபோல ஆள்சேர்ப்பு பிரிவு நிர்வாக அதிகாரி சுனிதாபாயிடமும் 12 பேரும் மனு கொடுத்து இருந்தனர். அந்த மனுவை அம்ருத்பாலிடம், சுனிதாபாய் கொடுத்து உள்ளார். அப்போது அந்த மனுக்களை குப்பையில் போடும்படி சுனிதாபாயிடம், அம்ருத்பால் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் முறைகேடு செய்து தேர்வு எழுதியவர்களிடம் இருந்து வசூலித்த ரூ.1.25 கோடியை அரசு ஊழியர் ஹர்ஷா, ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரிடம் கொடுத்து உள்ளார்.

அந்த பணத்தை சாந்தகுமார், அம்ருத்பாலிடம் கொடுத்து உள்ளார். பின்னர் ரூ.1.25 கோடியை தனது பினாமியான சம்புலிங்கா பெயருக்கு அம்ருத்பால் மாற்றியதும் தெரியவந்து உள்ளது. அந்த பணத்தில் ரூ.41 லட்சத்தை சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Next Story