வக்கீல்கள் சமூக பொறுப்புடன் செயல்படவேண்டும்


வக்கீல்கள் சமூக பொறுப்புடன் செயல்படவேண்டும்
x

வக்கீல்கள் சமூக பொறுப்புடன் செயல்படவேண்டும் என்று மாநில ஐகோர்ட்டு நீதிபதி பிரசன்ன பி வராலே கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல்,

கோலார் கோர்ட்டு திறப்பு

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை உள்ள தாலுகா மற்றும் மாவட்ட கோர்ட்டு கட்டிடம் ரூ.1¼ லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோலார் தங்கவயல் தாலுகா மற்றும் மாவட்ட கோர்ட்டு நிர்வாகம், மாவட்ட பொதுப்பணித்துறை, வக்கீல்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

இந்த கட்டிடத்தை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பிரசன்ன பி வராலே, ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பா ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது நீதிபதி வீரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டங்களில் கோலார் தங்கவயலும் ஒன்று. தங்க உற்பத்தியில் சிறந்து விளங்கியது இந்த தங்கவயல். ஆரம்ப காலத்தில் தங்கவயலில்தான் முதன் முதலில் தூய்மையான குடிநீர் கிடைத்தது. ஆனால் தற்போது நிலமை மாறிவிட்டது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.

தங்கம் உற்பத்தி செய்து கொடுத்த மக்கள் நிலமை மிகவும் மோசமாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் அதிகரித்து காணப்படுகிறது. யாரும் சட்டத்தை மதிப்பது இல்லை. வக்கீல் தொழிலுக்கு பலர் வருகின்றனர். அனைவரும் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வருகின்றனர். ஆனால் உண்மையான வக்கீல் தொழில் என்பது கிராமங்களில் சென்று சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வக்கீல்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி பிரசன்னா பி வராலே கூறியதாவது:-

நாட்டில் சமூக வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. பணத்தை விட சமூக பொறுப்பு வக்கீல்களுக்கு இருக்கவேண்டும். அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க செயல்படவேண்டும். வக்கீல்களில் அலட்சியத்தால் வழக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி கோலார் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளனர். அதை விரைந்து முடிக்க வக்கீல்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story