உ.பி: அக்னிபத் வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைது
உத்தரப்பிரதேசத்தில் அக்னிபத் வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ,
ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பல இடங்களில் ரயில்கள், பஸ்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொழுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் அக்னிபத் வன்முறையில் ஈடுபட்ட 80 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டதற்காக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த ஒன்பது பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக அலிகார் மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி தெரிவித்தார்.
போலீசார் சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் இளைஞர்களின் போராட்டத்தின் போது பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த ஒன்பது பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பயிற்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக விரோத நடவடிக்கைகளை தூண்டிவிட்டு, போராட்டக்காரர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட தூண்டியுள்ளனர்.போலீஸ் காவலில் உள்ள மற்ற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வழக்கு ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.