பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு


பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
x

எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஊழலை இணைத்து பார்த்தால், அது ரூ.20 லட்சம் கோடியை விட கூடுதலாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் போபால் நகரில் இன்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, ஒரு சில அரசியல் கட்சிகள் சுயநலன்களை திருப்திப்படுத்தும் அரசியல் செய்து, சமூக விரிசல்களை ஏற்படுத்துகின்றன. உத்தரவாதம் என்ற ஒரு புதிய வார்த்தை இன்று பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எதிர்க்கட்சிகளுக்கு உத்தரவாதங்கள் என்றால், ஊழல் என்று அர்த்தம். சமீபத்தில் ஒரு புகைப்படம் பார்த்தேன்.

சமீபத்திய எதிர்க்கட்சிகளின் கூட்டம் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த கட்சிகளின் ஊழலை நீங்கள் இணைத்தீர்கள் என்றால், அது ரூ.20 லட்சம் கோடியை விட கூடுதலாக இருக்கும் என சாடினார்.

அவர் இந்த உரையின்போது, காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டதுடன், அக்கட்சிகளின் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த கட்சிகள் வழங்க கூடிய ஒரே உத்தரவாதம் என்பது ஊழலுக்கான உத்தரவாதமே ஆகும். இதுபோன்ற ஊழலை ஏற்று கொள்ள வேண்டுமா? என்று தற்போது நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

நானும் இன்று ஓர் உத்தரவாதம் அளிக்கிறேன்... ஊழலுக்கான உத்தரவாதம் அவர்களிடம் இருக்குமென்றால், அதன்பின்னர், அனைத்து ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மோடியின் உத்தரவாதமும் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஏழைகளிடம் கொள்ளையடிப்பவர்கள் கடுமையாக எதிர்கொள்ளப்படுவார்கள் என கூறிய பிரதமர் மோடி, பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஊழல் செய்தவர்கள் யாரையும் நான் விடமாட்டேன் என அவர் கூறினார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.


Next Story