அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; உத்தர பிரதேசத்தை சர்வதேச சின்னமாக மாற்றும் வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; உத்தர பிரதேசத்தை சர்வதேச சின்னமாக மாற்றும் வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 2 Jan 2024 3:27 PM GMT (Updated: 2 Jan 2024 3:45 PM GMT)

இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாக அயோத்தி ராமர் கோவில் விளங்கும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"இன்று மொத்த உலகமும் அயோத்தி நகரை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்குகிறது. அனைவரும் அயோத்திக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இது உத்தர பிரதேச மாநிலத்தை சர்வதேச் சின்னமாக மாற்றுவதற்கு நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பாகும்.

அயோத்தி ராமர் கோவில் இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும். கோவில் திறப்பு விழாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் திருப்திகரமான அனுபவத்தை வழங்குவதற்காக உத்தர பிரதேச மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஜனவரி 22-ந்தேதிக்குப் பிறகு, உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ராம பக்தர்கள் அயோத்திக்கு வருகை தருவார்கள். அவர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள மொழிகள் மற்றும் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 9 உலக மொழிகள் ஆகியவற்றில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும்.

ராமர் கோவில் குடமுழுக்கு விழா, கோடிக்கணக்கான சனாதனவாதிகளுக்கு மகிழ்ச்சி, பெருமை மற்றும் ஆத்ம திருப்தியை வழங்கும். அனைத்து கோவில்களிலும் வரும் 22-ந்தேதி ராமஜோதி ஏற்றப்படும். நாடு முழுவதும் உள்ள சனாதன நம்பிக்கையாளர்கள், இந்த விழாவை வரவேற்கும் விதமாக தங்கள் இல்லங்களில் ராமஜோதியை ஏற்றுவார்கள். ஸ்ரீ ராமர் பிறந்த பகுதியில் நாம் இருக்கிறோம் என்பது நமது அதிர்ஷ்டம் ஆகும்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


Next Story