தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை; பெங்களூரு போலீசார் முடிவு


தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை; பெங்களூரு போலீசார் முடிவு
x

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் அல்லது சிறை தண்டனை விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் அல்லது சிறை தண்டனை விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள்

பெங்களூரு நகரில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளிலும், தடை செய்யப்பட்ட இடங்களிலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வருவதால், அது பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அது டோயிங் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதனையே சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட சாலைகள், இடங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறுவை ஏற்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மன்னிப்பு கடிதம்

இதனை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி, அடிக்கடி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, ஒரு வாகன ஓட்டி தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தினால், இந்திய தண்டனை சட்டம் 283 மற்றும் 107-ன்படி சட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருக்கிறாா்கள்.

இந்த சட்டங்களின்படி முதல் முறை தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த அபராத தொகையை கோர்ட்டில் செலுத்தி வாகனத்தை உரிமையாளர் பெற்றுக் கொள்ள முடியும். 2-வது முறையாக தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி விதிமுறையை மீறினால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியிடம் அபராதம் மற்றும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்படும்.

சிறை தண்டனை

இவ்வாறு கடிதம் எழுதி கொடுத்த வாகன ஓட்டி ஒரு ஆண்டுக்குள் 3-வது முறையாக தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி விதிமுறையை தொடர்ந்து மீறினால், அவருக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை அபராத தொகையை வாகன ஓட்டியால் செலுத்த முடியாமல் போனால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுபோல் 6 வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்திருப்பதுடன், மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.


Next Story