பி.டி.ஏ. லே-அவுட்டுகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு


பி.டி.ஏ. லே-அவுட்டுகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பி.டி.ஏ. லே-அவுட்டுகளை பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு:

பி.டி.ஏ. லே-அவுட்டுகளை பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு வளர்ச்சி ஆணைய (பி.டி.ஏ.) தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடைத்தரகர்கள் தலையீடு

நான் பி.டி.ஏ. தலைவராக வந்த பிறகு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆணைய சொத்துக்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். ஊழல்கள், இடைத்தரகர்களின் தலையீடு அதிகளவில் இருந்தன. நான் பதவி ஏற்றபோது, இந்த ஆணையத்திற்கு ரூ.800 கோடி கடன் இருந்தது. நான் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தால், அந்த கடனை திரும்ப வழங்கிவிட்டோம். அத்துடன் இன்று இந்த பி.டி.ஏ.விடம் ரூ.1,000 கோடி உள்ளது.

பி.டி.ஏ. லே-அவுட்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வீட்டுமனைகளை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளேன். மாற்று வீட்டுமனை ஒதுக்கீடு, முனை பகுதி மனை ஒதுக்குவது என்று எல்லாவற்றிலும் தவறு நேராத வண்ணம் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.

11 ஆயிரம் ஏக்கர் நிலம்

பி.டி.ஏ.வுக்கு சொந்தமான 11 ஆயிரம் ஏக்கர் நிலம் பிரச்சினையில் உள்ளது. அந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்ட பிரிவில் இருந்து 193 வக்கீல்களையும் நீக்கிவிட்டு, புதிதாக 45 பேரை நியமித்துள்ளோம். பி.டி.ஏ. நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பி.டி.ஏ.வில் ஊழல் செய்த அதிகாரிகள் 25 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இடைத்தரகர்களுக்கு முற்றிலுமாக கடிவாளம் போட்டுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் 3,735 வீட்டு மனைகள் ஏலம் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சி அடைந்த பி.டி.ஏ. லே-அவுட்டுகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். ரூ.10 கோடி செலவில் பி.டி.ஏ. அலுவலகம் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு எஸ்.ஆர்.விஸ்வநாத் கூறினார்.


Next Story