சிவமொக்கா- பெங்களூரு இடையே ஆகஸ்டு 31-ந்தேதி முதல் விமான சேவை


சிவமொக்கா- பெங்களூரு இடையே  ஆகஸ்டு 31-ந்தேதி முதல் விமான சேவை
x
தினத்தந்தி 27 July 2023 6:45 PM GMT (Updated: 27 July 2023 6:45 PM GMT)

சிவமொக்கா- பெங்களூரு இடையே ஆகஸ்டு 31-ந்தேதி முதல் விமானம் இயக்கப்படுகிறது.

சிவமொக்கா-

சிவமொக்கா- பெங்களூரு இடையே ஆகஸ்டு 31-ந்தேதி முதல் விமானம் இயக்கப்படுகிறது. இதற்காக முன்பதிவு செய்ய போட்டா போட்டி நிலவுவதால், ஒரு நபருக்கான டிக்கெட் கட்டணம் ரூ.7,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிவமொக்கா விமான நிலையம்

சிவமொக்கா டவுனில் சோகானே பகுதியில் விமானம் நிலையம் ரூ.220 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஓடு பாதை 3,110 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டது. 662.38 ஏக்கரில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் மேற்கூரை தாமரை பூ வடிவில் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பிறந்த நாளில் திறந்துவைத்தார். இந்த விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, மும்பை, பெலகாவி, மங்களூரு உள்ளிட்ட 4 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

31-ந்தேதி முதல் விமான சேவை

இருப்பினும் தற்போது முதற்கட்டமாக சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தை இயக்க இன்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவை ஆகஸ்டு 11-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் விமான சேவை ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் விமானம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு சிவமொக்காவுக்கு காலை 11.05 மணிக்கு சென்றடையும். சிவமொக்காவில் காலை 11.25 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12.25 மணிக்கு பெங்களூருவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணம் உயர்வு

இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இன்டிகோ விமான நிறுவனம் சிவமொக்கா -பெங்களூரு இடையே ரூ.3,999-ஐ விமான கட்டணமாக நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் பெங்களூரு- சிவமொக்கா, சிவமொக்கா-பெங்களூரு இடையே விமானத்தில் பயணிக்க விரும்புவோர் மத்தியில் கடும் போட்டா போட்டி எழுந்தது.

இதனால் விமான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.7,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிவமொக்கா விமான நிலையத்தில் விமானம் வந்து செல்லவும், பயணிகள் வந்து செல்வதற்கான அனைத்து வசதிகளையும் முடிக்கவே 11-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிக்குள் முதல் விமான சேவை மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story