ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்


ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 March 2024 8:19 PM IST (Updated: 20 March 2024 8:24 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மும்பையில் நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போது, "நாங்கள் ஒரு சக்திக்கு எதிராக போராடுகிறோம், பிரதமர் மோடி அந்த சக்தியின் முகமூடி என்று குறிப்பிட்டார். மிகப்பெரும் அதிகாரத்துக்கு எதிரான தங்களுடைய போராட்டம் என்பதை சக்திக்கு எதிரான போராட்டமாக அவர் சித்தரித்தார். மேலும், மோடி ஒரு அதிகாரத்திற்காக (சக்தி) வேலை செய்யும் ஒரு முகமூடி என்றும், மோடிக்கு எதிரான போராட்டமானது தனிப்பட்டது இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்து மதத்தில் உள்ள சக்தி என்ற தெய்வீக சொல்லை ராகுல் காந்தி பயன்படுத்தியதாக கூறி பா.ஜனதா விமர்சனம் செய்யத்தொடங்கியது.

ராகுல் காந்தியின் அந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கும் அதை வழிபடுபவர்களுக்கும் இடையேதான் இந்த போராட்டம். அவர்கள் (காங்கிரஸ்) தங்கள் தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் போராட்டம் 'சக்தி'க்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு மகளும் 'சக்தி'யின் ஒரு வடிவம். தாய்மார்களே, சகோதரிகளே, நான் உங்களை சக்தியாகவே வணங்குகிறேன். நான் பாரத தாயின் பூசாரி" என்று கூறினார்.

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், சக்தி குறித்து பேசிய ராகுல் காந்தியும் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். பிரதமர் மோடி தனது வார்த்தைகளை திரித்து பேசியதாக குற்றம் சாட்டிய அவர், மோடி முகமூடி அணிந்திருக்கும் சக்தியைப் பற்றி பேசியதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஒரு சக்தியின் முகமூடிதான் மோடி என்று கூறினேன். அந்த சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று குறிப்பிட்டேன். அந்த சக்தியானது, இந்தியாவின் குரல், இந்தியாவின் அரசு நிறுவனங்கள், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், இந்திய தொழில்துறை மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அதே சக்தியை (அதிகாரத்தை) பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கிறார். அதேசமயம், ஒரு விவசாயி சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அதே அதிகாரத்தின் அடிமையாக இருக்கும் மோடி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் நாட்டின் ஏழைகள் மீது ஜி.எஸ்.டி. வரியை திணித்து அந்த சக்தியின் பலத்தை அதிகரிக்க நாட்டின் செல்வத்தை ஏலம் விடுகிறார். எந்த மத சக்தியையும் பற்றி நான் பேசவில்லை. அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் 'சக்தி' பற்றிதான் பேசினேன். அதனால்தான் நான் அந்த சக்திக்கு எதிராக குரல் கொடுக்கும்போதெல்லாம் மோடியும் அவரது பொய்கள் நிறைந்த இயந்திரமும் கொதிப்படைகின்றன" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும்படி, இந்துகளின் கடவுளான சக்தியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story