கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவுக்கு தேவேகவுடாவை அழைக்கவில்லை: மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சி - ஜனதாதளம் (எஸ்) விமர்சனம்
கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவுக்கு தேவேகவுடாவை அழைக்கவில்லை. மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று ஜனதா தளம் (எஸ்) விமர்சித்துள்ளது.
பெங்களூரு:
அழைப்பு விடுக்கவில்லை
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஜனதாதளம் (எஸ்) கட்சி குற்றம்சாட்டியது. இதை மறுத்த பா.ஜனதா, தேவேகவுடாவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அழைப்பு கடிதம் அனுப்பியதாக கூறியது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. செய்த தவறையே நியாயப்படுத்தி கொள்வது பா.ஜனதாவின் கலை. அதிகாரபூர்வ அழைப்பிதழில் தேவேகவுடாவின் பெயர் இல்லை. ஆனால் முதல்-மந்திரி கடிதம் எழுதியதாக பா.ஜனதா மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது. 11-ந் தேதி விழா நடக்கிறது என்றால், 10-ந் தேதி அழைப்பு கடிதம் அனுப்புகிறார்கள். அந்த கடிதம் தேவேகவுடாவுக்கு கிடைத்தது எப்போது?.
வெட்கப்பட வேண்டும்
பா.ஜனதாவினரின் கண்களுக்கு காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?. பெயரளவுக்கு தேவேகவுடாவுக்கு அழைப்பு அனுப்பினர். நள்ளிரவு 12.30 மணிக்கு கடிதம் வந்து சேர்ந்தது. இதுதான் தேவேகவுடாவுக்கு இந்த அரசு வழங்கும் மரியாதையா?. உண்மை நிலையை மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்க வேண்டும். பா.ஜனதா வெட்கப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் கல்வி, மதம், சாதி, கலாசாரம், உணவு, உடைகள் விஷயத்தில் பா.ஜனதா சர்வநாசம் செய்து கொண்ருக்கிறது. குடும்ப அரசியல் என்று நீங்கள் (பா.ஜனதா) சொல்கிறீர்கள். குஜராத் முதல் பி.சி.சி.ஐ. கிரிக்கெட் வரை பதவியில் இருப்பவர்கள் யாருடைய குடும்பம். கர்நாடகத்தில் வளர்ந்துள்ள பா.ஜனதா குடும்பங்கள் எத்தனை உள்ளது.
இவ்வாறு ஜனதாதளம் (எஸ்) குறிப்பிட்டுள்ளது.