கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம்


காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கண்டித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கண்டித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

காவிரி ஒழுங்காற்று குழு

கர்நாடக அணைகளில் நீர் இல்லாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 9 நாட்கள் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைந்தது. இதையடுத்து காவிரி நீர் திறப்பதை கர்நாடகம் நிறுத்தியது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாய சங்கத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் மண்டியாவில் விவசாய சங்கத்தினா் டயர்களை எரித்தும், காவிரி ஆற்றில் இறங்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

2-வது நாளாக போராட்டம்

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் மண்டியாவில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மண்டியா சஞ்சய் சர்க்கிள் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கையில் தட்டை ஏந்தி பிச்சை எடுத்தும், வாயில் அடித்து கொண்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேபோல், பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கும்பலகோடு பகுதியில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் மண்டியா சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் முன்பு மாவட்ட விவசாய சமிதியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு செல்ல கூடாது என்றும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

புளிஞ்சூர் சோதனைச்சாவடி முற்றுகை

இந்தநிலையில் நேற்று காலை கர்நாடக விவசாயிகள் சாம்ராஜ்நகர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாக்கியராஜ் தலைமையில் கர்நாடகம்-தமிழகம் எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த புளிஞ்சூர் சோதனைச்சாவடிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கோஷம் எழுப்பியடி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர். அதன்பிறகு சாலையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கர்நாடக மாநில போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து போகச்சொன்னார்கள். ஆனால் அவர்கள் மறுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கர்நாடக போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக் கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் உருவப்படம் கிழிப்பு

அதுபோல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படங்களை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட, 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் எல்லையில் இயல்பு நிலை திரும்பியதும், வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் அத்திப்பள்ளி வழியாக வந்து சென்றன.


Next Story