அரசு பள்ளிகளை விட்டு வெளியேறும் குழந்தைகள் பா.ஜனதா அரசின் தோல்வி இல்லையா?; காங்கிரஸ் கேள்வி
அரசு பள்ளிகளை விட்டு வெளியேறும் குழந்தைகள் பா.ஜனதா அரசின் தோல்வி இல்லையா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காலத்தில் பொருளாதார சூழ்நிலை காரணமாக 1.62 லட்சம் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இப்போது அந்த குழந்தைகள் மீண்டும் தனியார் பள்ளியில் சேருகிறார்கள். குழந்தைகளின் கல்வியை விளையாட்டு என்று கருதும் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், அரசு பள்ளிக்கு குழந்தைகள் வராவிட்டால் அதன் நிறத்தை யார் பார்ப்பார்கள்?. குழந்தைகள் அரசு பள்ளிகளை விட்டு வெளியேறுவது அரசின் தோல்வி இல்லையா?.
ஜாமீனில் வெளியே உள்ள பி.எல்.சந்தோஷ் என்பவர் ஆபரேஷன் தாமரை வழக்கில் போலீசாருக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது எம்.எல்.ஏ.க்களை திருடுபவர்களுக்கு தெரியாதா?. தெலுங்கானாவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி பணம் எங்கிருந்து வந்தது?. இவ்வளவு பெரிய தொகை கிடைத்தும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அமைதியாக இருப்பது ஏன்?.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.