கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதியா?; முதல்-மந்திரி சித்தராமையா பதில்


கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதியா?; முதல்-மந்திரி சித்தராமையா பதில்
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி நடக்கிறதா? என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளார்.

ஹாவேரி:

முதல்-மந்திரி சித்தராமையா ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மழை பெய்யாது என்று பா.ஜனதாவினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். இப்போது மழை பெய்யவில்லையா?. இந்த மாதிரியான மூடநம்பிக்கைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு லட்சம் வீடுகள் இடிந்து விழுந்தன. வெள்ளம் ஏற்படுவதும், வறட்சி உண்டாவதும் இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகள்.

தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கி பெய்யும். ஆனால் இப்போது மழை பெய்யத்தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி சேருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அவர்கள் ஒன்றுபட்டால் எனக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அவரிடமே போய் கேளுங்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த பற்றாக்குறை தற்போது நீங்கியுள்ளது. தற்போது இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளது.மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட குழுக்கள் அமைக்கப்படும். நான் மழை சேதங்களை பார்வையிடுகிறேன். ஹாவேரியில் விவசாயிகள் உயிரிழந்ததால் நான் இங்கு வந்துள்ளேன். உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து மழை சேதங்களை பார்வையிடுவேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story