அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி - மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடப்பதாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா புகார் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குஜராத்சட்டசபை தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பல ஆண்டுகளாக பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை தற்போது ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஆளும் பாஜகவுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குஜராத் தேர்தலை பொறுத்தவரை பாஜகவே தற்போது முன்னணியில் இருக்கிறது. ஆனால், அதற்கு மிக நெருக்கத்தில் ஆம் ஆத்மி வந்துள்ளதுதான் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், நாளுக்கு நாள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதால் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், குஜராத்தில் ஆம் ஆத்மியின் அசுர வளர்ச்சியை கண்டு கோபமடைந்துள்ள பாஜக, அர்விந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், மணீஷ் சிசோடியா வெளியிட்டிருக்கும் பதிவில்,
"குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் நிலவுவதால், பாஜக கடும் விரக்தியில் உள்ளது. இந்த தோல்வி பயத்தின் காரணமாக அர்விந்த் ஜெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக பயங்கர சதித்திட்டம் தீட்டியுள்ளது.
குறிப்பாக, டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி மூலமாக இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் போடப்பட்டுள்ளது. தனது ஆதரவு ரவுடிகளிடம் இந்த வேலையை எம்.பி. மனோஜ் திவாரி ஒப்படைத்துள்ளார். இந்த நேரத்தில் பாஜகவுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். உங்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு ஆம் ஆத்மி என்று பயப்படாது. பாஜகவின் அராஜகத்துக்கும், ரவுடிகளுக்கும் மக்கள் விரைவில் பதில் அளிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.