காயமடைந்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


காயமடைந்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

காயமடைந்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு: காயமடைந்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மங்களூரு ஆட்டோ வெடி குண்டு விபத்து குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எல்.இ.டி. வெடிபொருட்கள்

மங்களூருவில் நேற்று மாலை (நேற்று முன்தினம்) 4.45 மணியளவில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த நபர் வைத்திருந்த குக்கர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் காயம் அடைந்த 2 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவை எல்.இ.டி. வெடி பொருட்கள் என்று தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணையில், காயம் அடைந்த அந்த நபரின் கிடைத்த ஆதார் போலியானது என்று தெரியவந்தது. அதில் உப்பள்ளி முகவரி இருந்தது. அந்த நபர் குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டினர். இதன் மூலம் இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று தெரியவந்துள்ளது. அந்த நபருக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் கோயம்புத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார்.

தொடர்புகளை கண்டுபிடிப்போம்

அவை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்த சம்பவம் பங்கரவாத செயலாக இருக்கலாம் என்று போலீசார் என்னிடம் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு அமைப்பினர் மங்களூரு வந்துள்ளனர். கர்நாடக போலீசாருடன் இணைந்து அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் உண்மைகள் வெளியே வரும். இதன் பின்னணியில் உள்ள பெரிய தொடர்புகளை கண்டுபிடிப்போம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story