காட்டுயானையை பிடிப்பதில் தாமதம்; அபிமன்யு யானைக்கு உடல்நல குறைவு


காட்டுயானையை பிடிப்பதில் தாமதம்; அபிமன்யு யானைக்கு உடல்நல குறைவு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:30 AM IST (Updated: 6 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

அபிமன்யு யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் காட்டுயானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும், மேலும் அஜய் மற்றும் கோபாலசாமி யானைகளுக்கு மதம் பிடித்து இருப்பதாகவும் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;


காட்டுயானை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பைராபுரா பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் இரைதேடி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று வெளியேறி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். மேலும் அந்த காட்டுயானைக்கு பைரா என்று பெயர் வைத்தனர்.

அபிமன்யு உள்பட 6 யானைகள்

இதையடுத்து பைரா காட்டுயானையை பிடிக்க மைசூரு தசராவில் தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யு மற்றும் அஜய், கோபாலசாமி உள்பட 6 கும்கி யானைகளை கடந்த 3 நாட்களுக்கு முன்பு பைராபுரா கிராமத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை தேடும் பணியில் அபிமன்யு உள்பட 6 கும்கி யானைகள் ஈடுபட்டன.

ஆனால் கடந்த 2 நாட்களாக தேடியும் பைரா காட்டுயானை சிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காட்டுயானையை பிடிக்கும் முயற்சியில் முக்கியமாக ஈடுபட்டு வந்த அபிமன்யு காலை முதலே மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்து கால்நடை டாக்டா், அபிமன்யுவை பரிசோதித்தார்.

மதம் பிடித்துள்ளது

பரிசோதனையில் அபிமன்யுவிற்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு கடுமையான வயிற்றுபோக்கும் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கிராந்தி கூறியதாவது:-

விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த பைரா என்ற காட்டுயானையை பிடிக்க 6 கும்கி யானைகள் வரவழைக்கபட்டுள்ளது.

இதில் மைசூரு தசரா விழாவில் தங்க அம்பாாியை சுமந்த அபிமன்யு யானையும் வந்துள்ளது. இந்த நிலையில் அபிமன்யு யானைக்கு தற்போது காய்ச்சலும், வயிற்றுபோக்கும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அஜய் மற்றும் கோபாலசாமி யானைகளுக்கு லேசான மதம் பிடித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டுயானையை பிடிக்கும் முயற்சி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story