பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்: போதை ஆசாமிக்கு டெல்லி போலீஸ் வலைவீச்சு
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை டெல்லி போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனது பெயர் சுதீர் சர்மா என்றும், தான் ஒரு தச்சு தொழிலாளி என்றும் கூறினார்.
பின்னர் அந்த நபர் ரூ.10 கோடி தராவிட்டால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மீண்டும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த நபர் இந்த முறை ரூ.2 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் கொலை செய்துவிடுவேன் என கூறினார்.
இதையடுத்து, அந்த நபரின் முகவரியை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அப்போது அந்த நபர் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த அவரது மகன் தனது தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது அவர் அதீத மதுபோதையில் இருந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து, தலைமறைவான அந்த போதை ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.