ராகுல் காந்தி தகுதி நீக்கம்: வயநாட்டில் கருப்பு நாளாக கடைப்பிடிக்க காங்கிரஸ் முடிவு
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கேரளாவின் வயநாட்டில் இன்றைய தினம் கருப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
வயநாடு,
காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கேரளாவின் வயநாட்டில் இன்றைய தினம் கருப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
கேரள காங்கிரசின் வயநாடு மாவட்ட குழு தலைவரான என்.டி. அப்பச்சன் இதனை தெரிவித்து உள்ளார். இதுபற்றி கேரள எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசை சேர்ந்த வி.டி. சதீசன் கூறும்போது, எம்.பி. பதவியில் இருந்து நீக்குவது என்ற இந்த முடிவு அவசர கதியிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் எடுக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் மக்களவை செயலகத்தின் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் எதிர்கொள்வோம். சூரத் கோர்ட்டு தீர்ப்பே இறுதியானது அல்ல. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் மீது காங்கிரஸ் நம்பிக்கை கொண்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.