இந்தியாவில் மருத்துவர் மற்றும் மக்கள் தொகைக்கு இடையேயான விகிதம் 1:834: மக்களவையில் தகவல்
நாட்டில் 3,61,400 செவிலியர்கள் பணியில் உள்ளனர் என மக்களவையில் மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. அது 82% அதிகரித்து தற்போது 706 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, 2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ படிப்புகளுக்கான எண்ணிக்கை 51,348 ஆக இருந்தது. அது 112% அதிகரித்து தற்போது 1,08,940 ஆக உள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான எண்ணிக்கையும் 31,185 ஆக இருந்தது. அது 127% அதிகரித்து 70,674 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் மருத்துவர் மற்றும் மக்கள் தொகைக்கு இடையேயான விகிதம் 1:834 ஆக உள்ளது. இதன்படி, பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள் 80 சதவீதம் என்ற அளவில் உள்ளனர். ஆயுஷ் மருத்துவர்கள் 5.65 லட்சம் என்றளவில் உள்ளனர்.
செவிலியர் மற்றும் மக்கள் தொகைக்கு இடையேயான விகிதம் 1:476 ஆக உள்ளது. இதன்படி, 3,61,400 செவிலியர்கள் நாட்டில் பணியில் உள்ளனர்.