'மோடிக்கு வாக்களிப்பேன் என்று கூறும் கணவருக்கு உணவு கொடுக்காதீர்கள்' - பெண் வாக்காளர்களிடம் கெஜ்ரிவால் பேச்சு


மோடிக்கு வாக்களிப்பேன் என்று கூறும் கணவருக்கு உணவு கொடுக்காதீர்கள் - பெண் வாக்காளர்களிடம் கெஜ்ரிவால் பேச்சு
x

பெண்களுக்காக ஆம் ஆத்மி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் வாக்காளர்களிடம் பேசியதாவது;-

"குடும்பத்தில் உள்ள ஆண்கள் பா.ஜ.க.விற்கு ஆதரவளிக்காமல், ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்குமாறு செய்ய வேண்டியது பெண்களின் பொறுப்பாகும். பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கும் ஆண்களை உங்களால் மட்டுமே மாற்ற முடியும். உங்கள் கணவர் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதாகச் சொன்னால், நீங்கள் அவருக்கு இரவு உணவை வழங்க மாட்டேன் என்று கூறுங்கள்.

உங்கள் கணவர் ஆம் ஆத்மியை ஆதரிப்பதாக சத்தியம் செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு கணவனும் தன் மனைவி சொல்வதைக் கேட்க வேண்டும், இல்லையா? மேலும் தன் மனைவியின் மீது கணவன் சத்தியம் செய்துவிட்டால், அந்த சத்தியத்தை அவர் பின்பற்ற வேண்டியவர் ஆவார்.

உங்கள் கணவரிடம் சொல்லுங்கள், கெஜ்ரிவால் உங்களுக்கு இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஆகியவற்றை கொடுக்கிறார். ஆனால் பா.ஜ.க. உங்களுக்காக என்ன செய்தது? ஏன் நீங்கள் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட வேண்டும்?

டெல்லி அரசு தனது பட்ஜெட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்தது. பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதன் மூலம் நிதியை விணப்படிப்பதாக பா.ஜ.க. என் மீது குற்றம் சுமத்தியது.

பா.ஜ.க.விடம் நான் கேட்கிறேன், நீங்கள் பல நபர்களுடைய மிகப்பெரிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்தீர்களே, அப்போது நிதி வீணாகவில்லையா?

பெண்களுக்கான அதிகாரம் என்ற பெயரில் பல மோசடிகள் நடந்து வருகின்றன. தங்கள் கட்சியில் உள்ள ஏதாவது ஒரு பெண்ணை பாராட்டிவிட்டு பெண்கள் அதிகாரம் பெற்றுவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் நான் ஒவ்வொரு பெண்ணின் கணக்கிலும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாயை செலுத்துகிறேன்."

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.


Next Story