கர்நாடகத்தில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை


கர்நாடகத்தில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
x

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) பணி இடங்களுக்கு கடந்த ஆண்டு (2021) தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றிருந்தது. இதுதொடர்பாக அரசு உத்தரவின் பேரில் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியவர்களிடம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் பெற்று, அவர்களை தேர்ச்சி பெற செய்தது தெரியவந்தது. குறிப்பாக கலபுரகி மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் பிரமுகர் திவ்யாவுக்கு சொந்தமான தனியார் பள்ளியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார், போலீஸ் நியமன பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் உள்பட 102-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூரு, கலபுரகி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறைக்கு சி.ஐ.டி. தகவல்

அதாவது கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் மற்றும் தேர்வு முறைகேட்டில் கைதான போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் அம்ருத்பால், சாந்தகுமார், ஹர்ஷா, ஸ்ரீதர் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக ஸ்ரீதர் வீட்டில் இருந்து மட்டும் ரூ.1½ கோடி கைப்பற்றப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக கைதான நபர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ரூ.4 கோடியும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு மூலமாக கைமாறிய பணம் ஆகும். மேலும் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாருக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருந்தது பற்றியும் சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தார்கள். இது அம்ருத்பால், சாந்தகுமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோர்ட்டு நிராகரித்து இருந்தது.

சட்டவிரோத பணபரிமாற்றம்

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது, ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது குறித்து அமலாக்கத்துறைக்கு, சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்து இருந்தார்கள். போலீசார் அளித்த தகவல்களின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அம்ருத்பால், சாந்தகுமார், ஹர்ஷா, ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதமே அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டுடன், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதையும் கண்டுபிடித்தனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.அம்ருத் பால், சாந்தகுமார் ஆகியோரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அம்ருத்பால் வீட்டில் சோதனை

பெங்களூரு சககாரநகரில் உள்ள அம்ருத்பாலுக்கு சொந்தமான வீடு, சிக்பள்ளாப்பூரில் உள்ள பண்ணை வீடு, அவரது அலுவலகம், உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் சோதனை நடத்தினார்கள். காலையில் இருந்து நேற்று மாலை வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. அம்ருத்பாலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் அதிகாரிகள் விசாரித்து சில தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது.

அம்ருத்பால் வீட்டில் இருந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்களை அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள். ஏனெனில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு மூலமாக கிடைத்த பணத்தின் மூலமாக பினாமி பெயரில் அம்ருத்பால் சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஸ்ரீதர் வீட்டில் சிக்கிய ரூ.1½ கோடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

இதுபோல், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாருக்கு சொந்தமான வீடு, உறவினர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பெங்களூரு போலீஸ் குடியிருப்பில் உள்ள சாந்தகுமாருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி பரிசீலனை நடத்தினார்கள். குடும்பத்தினரிடம் தகவல்களை கேட்டு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

அம்ருத்பால், சாந்தகுமார் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்கள், வங்கி கணக்குகள், சொத்து பத்திரங்கள், பினாமி பெயரிலான பத்திரங்கள் ஆகியவை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவற்றை அதிகாரிகள் தொடர்ந்து பரிசீலித்து வருகின்றனர். அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனை நேற்று பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அம்ருத்பாலுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Next Story