சிவமொக்கா-துமகூரு ரெயில் சேவை பெங்களூரு வரை நீட்டிப்பு; தென்மேற்கு ரெயில்வே தகவல்
சிவமொக்கா-துமகூரு ரெயில் சேவை பெங்களூரு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சிவமொக்கா;
சிவமொக்காவில் இருந்து துமகூரு வரை இயக்கப்பட்டு வந்த டெமோ விரைவு ரெயில் சேவை பெங்களூரு பானசவாடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 12-ந்தேதி முதல் சிவமொக்கா-அரிசிகெரே-துமகூரு வரை இயக்கப்பட்டு வந்த டெமோ விரைவு ரெயில்(வண்டி எண்:06513-06314) சேவை பெங்களூரு பானசவாடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தினமும் அதிகாலை 5.50 மணிக்கு பானசாவடியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 6.40 மணிக்கு யஷ்வந்தபூர், காலை 8.05 மணிக்கு துமகூருவை சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு சிவமொக்காவை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக அதேதினம் மதியம் 1.05 மணிக்கு சிவமொக்காவில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு பானசவாடி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.