வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை:கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிக்கமகளூரு-
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வரதட்சணை கொடுமை
சிவமொக்காவை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது கல்பனாவின் பெற்றோர், சிவராஜிக்கு நகை, பணம் வரதட்சணையாக கொடுத்திருந்தனர். திருமணம் முடிந்து சில மாதம் கணவன்-மனைவி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், சிவராஜ் மற்றும் அவரது தாய் சாந்தா, சகோதரி தீபா ஆகியோர் கல்பனாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
மேலும் சிவராஜ், தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்றும் அதனை வாங்க உனது வீட்டில் பணம் வாங்கி வரும்படியும் கல்பனாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கல்பனா மறுத்ததாக தெரிகிறது.
பெண் தற்கொலை
இதனால், சிவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கல்பனாவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கல்பனா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், தனது மகள் சாவுக்கு அவரது கணவர் சிவராஜ், மாமியார் சாந்தா, மைத்துனி தீபா ஆகியோர் தான் காரணம் என கல்பனாவின் தாய் இந்திரம்மா சிவமொக்கா மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிவராஜ், சாந்தா, தீபா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
7 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மானு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, சிவராஜ், சாந்தா, தீபா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.