முன்னாள் மந்திரி நிங்கய்யா காங்கிரசில் இணைந்தார்


முன்னாள் மந்திரி நிங்கய்யா காங்கிரசில் இணைந்தார்
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

‘டிக்கெட்’ பறிக்கப்பட்ட அதிருப்தியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி நிங்கய்யா காங்கிரசில் இணைந்தார்.

சிக்கமகளூரு-

'டிக்கெட்' பறிக்கப்பட்ட அதிருப்தியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி நிங்கய்யா காங்கிரசில் இணைந்தார்.

டிக்கெட் பறிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. இதையொட்டி டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் அரசியல் கட்சியினர் கட்சி தாவலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முன்னாள் மந்திரி நிங்கய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் கடந்த 4 மாதங்களாக மூடிகெரே தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த எம்.பி.குமாரசாமிக்கு அக்கட்சி மூடிகெரேயில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

இதனால் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். இதனால் மூடிகெரே தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிங்கய்யாவிடம் இருந்து டிக்கெட் பறிக்கப்பட்டு, அதாவது அவரை மாற்றிவிட்டு சமீபத்தில் கட்சியில் சேர்ந்த எம்.பி.குமாரசாமியை ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளராக அறிவித்தது.

காங்கிரசில் இணைந்தார்

கடைசி நேரத்தில் தான் மாற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்த நிங்கய்யா, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகினார். மேலும் சுயேச்சையாக போட்டியிட முடிவு ெசய்து வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த வேட்புமனுவை அவர் வாபஸ் பெற்றார். இதையடுத்து முன்னாள் மந்திரி நிங்கய்யா காங்கிரசில் சேர முடிவு செய்தார்.

அதன்படி நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற நிங்கய்யா, கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சி கொடியும், சால்வையும் கொடுத்து டி.கே.சிவக்குமார் வரவேற்றார். இதையடுத்து நிங்கய்யா கூறுகையில், மூடிகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நயனா மோட்டம்மாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்.


Next Story