10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொலை...? - மேற்குவங்காளத்தில் கொடூரம்


10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொலை...? - மேற்குவங்காளத்தில் கொடூரம்
x

10-ம் வகுப்பு மாணவியின் உடல் குளம் அருகே மீட்கப்பட்டது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் வடக்கு தினஜ்பூர் மாவட்டம் கலியகஞ்ச் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை டியூசன் சென்றார். ஆனால், டியூசன் சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை கலியகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் இருந்து துணிகள் கிழிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேபகுதியை சேர்ந்த ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை பிரேதபரிசோதனைக்கு உடலை தரமாட்டோம் என சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story