45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு


45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு
x

சாகரில் 45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாள். விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா

4 வயது சிறுமி

துமகூரு மாவட்டம் குப்பியை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி ரேகா. இந்த தம்பதியின் மகள் தன்விகா (வயது 4). இவள் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். இந்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் தன்விகாவை அவளது பெற்றோர் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா சிருமந்தே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் தன்விகா, அந்தப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் அங்கு விளையாடி கொண்டிருந்தாள்.

கிணற்றில் தவறி விழுந்து சாவு

அப்போது, அங்குள்ள தரைமட்ட கிணற்றின் அருகே அவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக தன்விகா, அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தாள். சுமார் 45 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை என தெரிகிறது. இதனால் பலத்த காயம் அடைந்த தன்விகா, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள், விரைந்து வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்த தன்விகாவை மீட்டு சாகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தன்விகா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story