எல்லை பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் நிலை எழவில்லை; மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி


எல்லை பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் நிலை எழவில்லை; மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
x

எல்லை பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் நிலை எழவில்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.

பெங்களூரு:

எல்லை பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் நிலை எழவில்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.

நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் சூழ்நிலை வரவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசை சித்தராமையா விமர்சித்துள்ளார். அவர் அரசியல் செய்கிறார். ஆனால் நாங்கள் எல்லை பிரச்சினையில் அரசியல் செய்ய விரும்பவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயமாக அத்தகைய நிலை தற்போது வரவில்லை. நாங்கள் ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். தேவைப்படும்போது, அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும்.

எல்லை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராகியுள்ளோம். கடந்த காலங்களில் முக்கியமான பிரச்சினைகளில் தேவை எழுந்தபோது, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை பெற்று செயல்பட்டுள்ளோம். இதை முறையை தொடர்ந்து கடைபிடிப்போம். அத்தகைய சூழ்நிலை தற்போது எழவில்லை.

நாடகமாடுகிறார்கள்

எல்லை பிரச்சினையில் மராட்டிய மாநிலத்தினர் நடத்தும் நாடகத்தில் நாம் ஒரு பகுதியாக இருக்க கூடாது. மராட்டியத்தினர் நாடகமாடுகிறார்கள்.

அதில் நடிகர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வருவதாக சொல்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மந்திரிகள் பெலகாவிக்கு வருவது சரியல்ல என்று கூறி மராட்டிய மாநில அரசுக்கு நாங்கள் தலைமை செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினோம். பதற்றமான நிலையை ஏற்படுத்த கூடாது என்றும், குழப்பத்தை விளைவிக்க கூடாது என்றும் கூறி நாங்கள் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினோம். கூட்டாட்சி தத்துவத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கள் மனதில் கொண்டுள்ளோம்.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.


Next Story