ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்


ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்
x

எங்கள் குடும்ப உறுப்பினர் போன்றவர் ஜெகதீஷ் ஷெட்டர், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

சிவமொக்கா:-

நடிகர் சிவராஜ்குமார் பிரசாரம்

சிவமொக்கா மாவட்டம் சொரப் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் குமார் பங்காரப்பா போட்டியிடுகிறார். இந்த நிலையில் மது பங்காரப்பாவுக்காக அவரது சகோதரியும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தார்.

அப்போது, காங்கிரசுக்கு ஆதரவாக சிவராஜ்குமார் 3 நாட்கள் பிரசாரம் செய்வார் என கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமார் நேற்று சொரப் தொகுதிக்கு உட்பட்ட அனவட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் மதுபங்காரப்பாவை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வெற்றி நிகழ்ச்சியில் ஆடிபாடுவேன்

நான் சொரப் தாலுகாவுக்கு பல முறை வந்துள்ளேன். ஆனால் அரசியல் நிகழ்ச்சியில் எதிலும் பங்கேற்றதில்லை. ஆனால் இந்த தேர்தலில் மது பங்காரப்பா வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய கூடுதல் பலத்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கு பிரசாரம் செய்கிறேன். மது பங்காரப்பா எப்போதும் மக்களின் கஷ்டத்தில் உடன் இருந்து வந்துள்ளார்.

இதனால் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற்றதும் வெற்றி நிகழ்ச்சியில் நான் உங்களுடன் சேர்ந்து ஆடி பாடுவேன்.

ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக பிரசாரம்

சொரப் தொகுதி மட்டுமின்றி சாகர், தீர்த்தஹள்ளி, பீதர், சிர்சி, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

ஜெகதீஷ் ஷெட்டர் எங்கள் குடும்ப உறுப்பினர் ேபான்றவர். எனவே அவரது தொகுதியிலும் பிரசாரம் செய்வேன். எனக்கு அரசியல் தெரியாது. நான் அரசியல் கட்சிகளில் சேர மாட்டேன். நான் பிரசாரத்திற்காக மட்டுமே வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை இந்த தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரை ஆதரித்து நடிகர் சிவராஜ்குமார் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story