உத்தரகன்னடாவில்பசுமாட்டு பால் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் பெண்
உத்தர கன்னடா மாவட்டத்தில் பசுமாட்டு பால் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
மங்களூரு-
உத்தர கன்னடா மாவட்டத்தில் பசுமாட்டு பால் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
பால் உற்பத்தி
உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியை அடுத்த அரசபுராவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ஹெக்டே. இவர் சிறு வயது முதலே மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் திருமணத்திற்கு பின்னர் கணருடன் சேர்ந்து பசுமாடுகளை வளர்க்க தொடங்கினார். தற்போது அவரிடம் 30 பசுமாடுகள் உள்ளது. இந்த மாடுகள் மூலம் தினமும் 100 லிட்டருக்கும் அதிகமான பால் கிடைக்கிறது. மேலும் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் விவசாய நிலத்தில் பசுமாடுகளுக்கு தேவையான தீவனங்களை உற்பத்தி செய்து வந்தார்.
மேலும் பசுமாடுகள் வெளியேற்றும் கழிவுகளை சேகரித்து, அதை உரமாக பயன்படுத்தி வருகிறார். தன்னுடன் நிலத்திற்கு மட்டுமின்றி, வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் உற்பத்தி செய்யும், உரம் மற்றும் பாலை சந்தைப்படுத்த தொடங்கினார். அதாவது தனி பெயர் வைத்து, அதற்கு காப்பு உரிமை பெற்று, விற்பனை செய்து வருகிறார்.
ரூ.2 லட்சம் லாபம்
உத்தர கன்னடா மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும், இவர்கள் நிறுவன பால் மற்றும் உரத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பால் ரூ.42-க்கும், ஒரு டன் உரம் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாய ஆர்வத்தை பார்த்து கர்நாடக வேளாண்துறை தரப்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இதுவரை 10-க்கும் அதிகமான விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது செயல்பாட்டிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.