உக்ரைனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக ஜெனரேட்டர்களை வழங்கிய இந்தியா


உக்ரைனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக ஜெனரேட்டர்களை வழங்கிய இந்தியா
x
தினத்தந்தி 23 Jan 2024 3:32 AM GMT (Updated: 23 Jan 2024 3:39 AM GMT)

இந்திய அரசு வழங்கிய ஜெனரேட்டர்கள், உக்ரைனில் உள்ள கல்வி நிலையங்களில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன்-ரஷியா இடையே நடந்து வரும் போர் காரணமாக, உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள், போக்குவரத்து முனையங்கள் உள்ளிட்ட பிரதான அமைப்புகளை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம், இந்திய அரசு சார்பில் உக்ரைன் மக்களுக்காக மனிதநேய அடிப்படையில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 14 தொகுதிகளாக நிவாரணப் பொருட்களை உக்ரைனுக்கு இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது உக்ரைனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக ஜெனரேட்டர்களை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதன்படி 30 ஜெனரேட்டர்கள் அடங்கிய தொகுப்பினை, உக்ரைன் தரப்பு அதிகாரிகளிடம் உக்ரைனுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின் வழங்கினார். இந்த உதவிக்காக உக்ரைன் தூதரகம் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய அரசு வழங்கிய ஜெனரேட்டர்கள், உக்ரைனில் உள்ள கல்வி நிலையங்களில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story