குடகில் வாகன சோதனை தீவிரம்


குடகில் வாகன சோதனை தீவிரம்
x

குடகில் தேர்தல் நடத்தை விதிமுறையைஅமலுக்கு வந்ததை யொட்டி வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் கூறியுள்ளார்.

குடகு:-

குடகில் வாகன சோதனை தீவிரம்

குடகில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக குடகு மாவட்டம் முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இதற்காக குடகில் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரளா, குடகு எல்லையான கர்கே, மகுட்டா, பெரும்பாடி ஆகிய இடங்களில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மைசூரு, ஹாசன், மங்களூரு செல்லும் வழித்தடங்களில் 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. குடகு மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

ரவுடிகள் மீது கண்காணிப்பு

இந்த சோதனையில் வனத்துறை, வருவாய்துறை உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மதுபானங்கள், பரிசு பொருட்கள், பணம் எடுத்து செல்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல தேர்தல் நடைபெறும் இடங்களையும் அடையாளம் கண்டு வருகிறோம். பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.

இதற்காக மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை வரவழைக்க இருக்கிறோம். இவர்கள் மிகவும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்கிடையில் ரவுடிகளின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகிறோம். இதுவரை 2 ரவுடிகள் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 6 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர 600 ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story