பயங்கரவாதி ஜுனைத் பதுங்கி இருக்குமிடம் தெரிந்தது; காதலியிடம் போலீஸ் தீவிர விசாரணை


பயங்கரவாதி ஜுனைத் பதுங்கி இருக்குமிடம் தெரிந்தது; காதலியிடம் போலீஸ் தீவிர விசாரணை
x

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட பயங்கரவாதி ஜுனைத் பதுங்கி இருக்குமிடம் தெரிந்துள்ளது. அவரது காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்ட பயங்கரவாதி ஜுனைத் பதுங்கி இருக்குமிடம் தெரிந்துள்ளது. அவரது காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயங்கரவாதி தலைமறைவு

பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே சுல்தான் பாளையாவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 5 பேருக்கும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நசீர் மற்றும் ஜுனைத்துடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்கள் உத்தரவின் பேரில் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபடவும் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில், பயங்கரவாதி ஜுனைத் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தான் கைதான பயங்கரவாதிகளிடம் 4 கையெறி குண்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சர்வதேச போலீசாரின் உதவியை நாடவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாராகி வருகின்றனர்.

விசாரணை

இந்த நிலையில், பயங்கரவாதி ஜுனைத்தின் காதலி பெங்களூருவில் இருப்பதை போலீசார் உறுதி செய்தார்கள். இதையடுத்து, ஜுனைத்தின் காதலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜுனைத்திற்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது பற்றி தனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த சில வாரங்களாக தன்னை தொடர்பு கொண்டு அவர் பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த 2021-ம் ஆண்டில் இருந்தே ஜுனைத் தலைமறைவாக உள்ளார். அப்படி இருந்தும் பெங்களூருவில் உள்ள காதலியுடன் ஜுனைத் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். ஆனால் 5 பயங்கரவாதிகள் கைதானதில் இருந்து காதலியுடன் பேசுவதை ஜுனைத் நிறுத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதுங்கி இருக்குமிடம்

அவரது காதலியிடம் நடத்திய விசாரணையில், ஜுனைத் பதுங்கி இருக்குமிடம் தெரியவந்துள்ளது. ஜுனைத் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே பாஸ்போர்ட்டு வாங்கி இருந்தார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாஸ்போர்ட்டு மூலமாக அவர் துபாய் சென்றதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.ஆனால் தற்போது துபாயில் இருந்து, மற்றொரு அரபு நாட்டுக்கு சென்று ஜுனைத் வசித்து வருவது பற்றிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஜுனைத்தின் காதலியிடம் விசாரித்து தகவல்களை பெற்று விட்டு, அவரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story