தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அவசர கடிதம்..!


தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அவசர கடிதம்..!
x

கோப்புப்படம்

பரம்பிக்குளம் அணை திறப்பது குறித்து முன்கூட்டியே கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கேரளா:

பரம்பிக்குளம் அணைக்கட்டு திறந்து விடும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர், மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அனைத்து அணைக்கட்டுகள், நீர்பிடிப்பு பகுதிகளிலும்,. ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. இதனால் அணைக்கட்டுகளில் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அதிக அளவு தண்ணீர் சாலக்குடி ஆற்றில் திறந்து விட வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பரம்பிக்குளம் அணைக்கட்டு திறந்து விடும்போது அது குறித்து முன்கூட்டியே கேரளா நீர்ப்பாசன துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பினராய் விஜயன் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த முறை இரவு நேரங்களில் திடீர் திடீரென்று பரம்பிக்குளம் அணை திறந்ததால், கேரளாவில் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த நிலை மீண்டும் வராமல் இருக்க தமிழக அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story