தான் போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலில் டி.கே.சிவக்குமாரிடம் வீழ்ந்த குமாரசாமி


தான் போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலில் டி.கே.சிவக்குமாரிடம் வீழ்ந்த குமாரசாமி
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டபோது டி.கே.சிவக்குமாரிடம் குமாரசாமி தோல்வியை தழுவினார்.

பெங்களூரு:-

2 முறை முதல்-மந்திரி

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராகி வருகிறது. இதற்காக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை 120 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் குமாரசாமி இருந்து வருகிறார்.

அவர், ஏற்கனவே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 2 ஆண்டுகள் முதல்-மந்திரியாக பதவி வகித்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2-வது முறையாக முதல்-மந்திரியாகி இருந்தார். தனிப்பெரும்பான்மை பலம் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைக்காவிட்டாலும், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2 முறை முதல்-மந்திரி பதவி வகித்த பெருமை குமாரசாமிக்கு உள்ளது. தற்போதும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமி தான்.

முதல் தேர்தலில் தோல்வி

இந்த நிலையில், 2 முறை முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமியே முதல் முறையாக சந்தித்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்து இருந்தார். ஆம், கடந்த 1999-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது ராமநகர் மாவட்டம் சாத்தனூர் தொகுதியில் (தற்போது அந்த தொகுதி இல்லை) ஜனதாதளம் (எஸ்) சார்பில் முதல் முறையாக குமாரசாமி களத்தில் இறங்கி இருந்தார். அவரை எதிர்த்து தற்போது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமார் போட்டியிட்டு இருந்தார்.

2 பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சாத்தனூர் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. ஆனால் தேர்தல் முடிவுகள் குமாரசாமிக்கு சாதகமாக அமையவில்லை. அந்த தேர்தலில் டி.கே.சிவக்குமாரிடம் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமியை தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

ஆனால் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 1996-ம் ஆண்டு ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதிக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த அவர், 1998-ம் ஆண்டு கனகபுரா தொகுதிக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், அதன்பிறகு, 1999-ம் ஆண்டு சாத்தனூர் தொகுதிக்குநடந்த சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்திருந்தார்.

அதன்பிறகு, ராமநகர் மற்றும் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வரும் குமாரசாமி தோல்வியை சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story