லோக் அயுக்தாவின் தற்போதைய செயல்பாடு எப்படி உள்ளது?


லோக் அயுக்தாவின் தற்போதைய செயல்பாடு எப்படி உள்ளது?
x

லோக் அயுக்தாவின் தற்போதைய செயல்பாடு எப்படி உள்ளது என்று பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பணமாக இருந்து வந்தது லோக் அயுக்தா அமைப்பு.

சிம்ம சொப்பணமாக இருந்தது

லஞ்சம் வாங்கும் சாதாரண அரசு ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லோக் அயுக்தா போலீசாரின் வலையில் சிக்கி வந்ததுடன், அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்து வந்தனர்.

குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி, சொத்து ஆவணங்கள், ரொக்கத்தை பறிமுதல் செய்து வந்தனர். அந்த அதிகாரிகளை சிறைக்கு தள்ளி வந்ததுடன், அவர்களுக்கு உரிய தண்டனையும் கிடைக்க செய்தனர். இதனால் லோக் அயுக்தா போலீசார் மீது அரசு அதிகாரிகள் நடுக்கத்தில் இருந்து வந்தனர். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கில்லை.

ஜனார்த்தன ரெட்டி கைது

குறிப்பாக சந்தோஷ் ஹெக்டே லோக் அயுக்தா நீதிபதியாக இருந்த போது கனிம சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பவனில் வைத்து லஞ்சம் வாங்கிய போது எம்.எல்.ஏ.வாக இருந்த சம்பங்கி லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். இதுபோன்று லோக் அயுக்தா போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் பற்றி சொல்லி கொண்டே போகலாம்.

இவ்வாறு கம்பீரமாக இருந்த லோக் அயுக்தா அமைப்பின் அதிகாரத்தை குறைத்து, அதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா மூடு விழா நடத்திவிட்டு, ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்திருந்தார். அதாவது லோக் அயுக்தா அமைப்பு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாமல் ஊழலுக்கு எதிராக தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு வந்தது. ஊழல் தடுப்பு படை முதல்-மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது.

லோக் அயுக்தாவுக்கு புத்துயிர்

இதனால் முதல்-மந்திரி அனுமதி இல்லாமல் அரசியல் தலைவர்கள், ஊழலில் ஈடுபடும் முக்கிய அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு படையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. ஊழல் தடுப்பு படைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் அதிரடி தீர்ப்பை கூறி இருந்தது. அதாவது ஊழல் தடுப்பு படையை ரத்து செய்துவிட்டு, லோக் அயுக்தாவுக்கு மீண்டும் முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, கர்நாடக அரசும் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கியது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக லோக் அயுக்தா அமைப்பு கர்நாடகத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று செயல்பட தொடங்கி உள்ளது. ஆனால் லோக் அயுக்தா போலீசார், இதற்கு முன்பு இருந்தது போன்று ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும், ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில் இருந்து பின்வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நேர்மையான போலீஸ் அதிகாரிகள்

ஊழல் தடுப்பு படையை ரத்து செய்த பின்பு, அங்கு பணியாற்றிய நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தான் லோக் அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது லோக் அயுக்தாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். அப்படி இருந்தும் கடந்த 6 மாதங்களாக பெரிய அளவில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகள் லோக் அயுக்தாவின் வலையில் சிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சிறிய அளவில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை மட்டும் கைது செய்து வருவதாகவும், சிறிய மீன்களை மட்டும் பிடிப்பதில் கவனம் செலுத்தும் லோக் அயுக்தா போலீசார், ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் பெரிய திமிங்கலங்களை பிடிப்பதில் பின்வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் லோக் அயுக்தா போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கி 6 மாதங்கள் கடந்தும், அந்த அமைப்பின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

மக்கள் எதிர்பார்ப்பு

எனவே லோக் அயுக்தா போலீசார், இதற்கு முன்பு இருந்த போது ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக பாரபட்சம் இன்றி தங்களது வேட்டையை தொடர வேண்டும், ஊழலில் ஈடுபடுவோருக்கு நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆதாரங்கள் கிடைத்தால் சோதனை

பெங்களூரு ஓசூர் ரோட்டை சேர்ந்த சூரி கூறுகையில், பெங்களூருவில் ஏதேனும் மக்களுக்கான பணிகள் செய்து கொடுக்க அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இவ்வாறு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் லஞ்சம் வாங்குவது குறையும். லோக் அயுக்தா போலீசார் பாரபட்சம் பார்க்காமல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அரசு அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் பெற்றும், சம்பளம் பெற்றும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு கடிவாளம் போட லோக் அயுக்தா போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம், என்றார்.

சிக்கமகளூரு மார்க்கெட் ரோட்டை சேர்ந்த வளையல் கடை உரிமையாளர் நாகராஜ் கூறுகையில், "ஒரு காலத்தில் லஞ்சம் வாங்குபவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் பயந்து வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் லோக்அயுக்தா அமைப்பு தான். ஆனால் தற்போது லோக் அயுக்தா நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. ஊழல், முறைகேடுகள் அதிகளவில் நடப்பதாக செய்திகள் வருகிறது. முன்பு லஞ்சம் வாங்குவோர் நேரடியாக பணத்தை வாங்குவார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் லஞ்சம் வாங்குவோர் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைனில் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் லோக் அயுக்தாவின் பிடியில் சிக்காமல் தப்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். எனவே லோக்அயுக்தா அமைப்புக்கு திறமையான அதிகாரிகளை நியமித்து பலமான அமைப்பாக கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் லோக்அயுக்தாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் நீதிபதிகள் மீண்டும் இணைய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீரேஷ் பட்டீல் கூறும் போது, லோக் அயுக்தா போலீசார் நேர்மையானவர்கள். நேர்மையாக இருந்தால் மட்டுமே லோக் அயுக்தாவில் பணியாற்றுவதுடன், ஊழலில் ஈடுபடும் திமிங்கலங்களை பிடிக்க முடியும். லோக் அயுக்தா போலீசார், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூற முடியாது. ஏனெனில் ஒரு அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்ட பின்பு சரியான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்துவார்கள். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. லோக் அயுக்தாவில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால், அது கம்பீரமாகவும், ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பணமாகவும் இருக்கும், என்றார்.

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை இல்லை

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.பி.எல். ரங்கநாத் கூறுகையில், "ஊழல்வாதிகளை ஒடுக்கவேண்டும் என்பதற்காகவே ஐகோர்ட்டு மீண்டும் லோக் அயுக்தா அமைப்புக்கு அதிகாரம் வழங்கியது. கர்நாடகாவில் மீண்டும் லோக்அயுக்தாவை அமல்படுத்தி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்படியிருந்தும் இதுவரை மாநிலத்தில் எத்தனையோ ஊழல்கள் அம்பலமாகி உள்ளது. ஆனால், லோக்அயுக்தா போலீசார் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரம் அளித்தும் லோக்அயுக்தா போலீசார் அமைதியாக இருப்பதன் மர்மம் ஏன் என தெரியவில்லை. இவர்களின் கைகளை அரசியல்வாதிகள் கட்டிப்போட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே லோக்அயுக்தா அதிகாரிகள் விரைந்து செயல்படவேண்டும்" என்றார்.

அதிகாரிகளுக்கு பயம் இல்லை

இதுபற்றி லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது:-

நமது மாநிலத்தில் தற்போது ஊழல் பெரிய அளவில் நடந்து வருகிறது. ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பயம் இல்லை. எந்த பயமும் இல்லாமல் ஊழல் செய்கிறார்கள். ஊழலுக்கு எதிராக இந்த சந்தர்ப்பத்தில் லோக் அயுக்தா போலீசார் போராட வேண்டும். ஊழலில் யார் ஈடுபட்டாலும், எந்த தயவுதாட்சண்யம் இன்றி தங்களது கடமைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஊழல்வாதிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story