ஹம்பியை சுற்றி பார்க்க வந்தபோது காதல் மலர்ந்தது: ஆட்டோ டிரைவரை கரம் பிடித்த பெல்ஜியம் இளம்பெண்


ஹம்பியை சுற்றி பார்க்க வந்தபோது காதல் மலர்ந்தது:  ஆட்டோ டிரைவரை கரம் பிடித்த பெல்ஜியம் இளம்பெண்
x

ஹம்பியை சுற்றி பார்க்க வந்தபோது ஆட்டோ டிரைவருடன், பெல்ஜியம் இளம்பெண்ணுக்கு காதல் மலர்ந்தது. அவர்கள் 2 பேரும் நேற்று விருபாக்‌ஷப்பா கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

விஜயநகர்: ஹம்பியை சுற்றி பார்க்க வந்தபோது ஆட்டோ டிரைவருடன், பெல்ஜியம் இளம்பெண்ணுக்கு காதல் மலர்ந்தது. அவர்கள் 2 பேரும் நேற்று விருபாக்‌ஷப்பா கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

பெல்ஜியம் பெண்ணுடன் காதல்

விஜயநகர் மாவட்டம் ஹம்பியை சேர்ந்தவர் அனந்தராஜ். ஆட்டோ டிரைவரான இவர், சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அதாவது, ஹம்பிக்கு சுற்றுலாவுக்கு வரும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று, அவர்களுக்கு ஹம்பியை பற்றிய வரலாற்று தகவல்களை எடுத்து கூறி வந்தார். அதுபோல், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பெல்ஜியத்தில் இருந்து கெமில் என்ற இளம்பெண் ஹம்பிக்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்திருந்தார்.அப்போது அவர்கள், அனந்தராஜின் ஆட்டோவில் பயணம் செய்திருந்தார். அத்துடன் ஹம்பியை பற்றிய தகவல்களை கெமிலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அனந்தராஜ் விளக்கமாகவும், புரியும்படியும் எடுத்து கூறி இருந்தார். அனந்தராஜ் நேர்மையாக இருந்ததால், அவரை கெமிலுக்கு பிடித்து விட்டது. பின்னர் 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர். மேலும் திருமணம் செய்யவும் அனந்தராஜ், கெமில் முடிவு செய்தார்கள்.

இந்து முறைப்படி திருமணம்

இதற்கு அனந்தராஜ் மற்றும் கெமில் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 23-ந் தேதி 2 பேருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் 25-ந் தேதி (அதாவது நேற்று) ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷப்பா கோவிலில் வைத்து 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தார்கள். அதன்படி, ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷப்பா கோவிலில் வைத்து அனந்தராஜ், கெமில் திருமணம் நடைபெற்றது.

இந்து மத முறைப்படி அனந்தராஜ், கெமிலின் கழுத்தில் தாலி கட்டினார். அவர்களின் திருமணத்தில் ஹம்பியை சுற்றியுள்ள கிராமத்தினர், அனந்தராஜின் குடும்பத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Next Story