மெட்ரோ தூண் விழுந்து தாய்-மகன் பலியான வழக்கில் 1,100 பக்க குற்றப்பத்திரிகை


மெட்ரோ தூண் விழுந்து தாய்-மகன் பலியான வழக்கில் 1,100 பக்க குற்றப்பத்திரிகை
x

மெட்ரோ தூண் விழுந்து தாய்-மகன் பலியான விவகாரத்தில், மெட்ரோ அதிகாரிகள் உள்பட 11 பேருக்கு எதிராக 1,100 பக்க குற்றப்பத்திரிகையை ஐகோர்ட்டில், போலீசார் தாக்கல் செய்தனர்.

பெங்களூரு:

மெட்ரோ தூண் விழுந்து தாய்-மகன் பலியான விவகாரத்தில், மெட்ரோ அதிகாரிகள் உள்பட 11 பேருக்கு எதிராக 1,100 பக்க குற்றப்பத்திரிகையை ஐகோர்ட்டில், போலீசார் தாக்கல் செய்தனர்.

தூண் விழுந்து தாய்-மகன் பலி

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ பாதைகள் அமைக்கும் பணிகள் முனைப்புடன் நடந்து வருகிறது. தற்போது கெங்கேரி-பையப்பனஹள்ளி உள்பட 4 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது. இதேபோல் நாகவரா பகுதியில் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சாலைகளின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நாகவரா பகுதியில் மெட்ரோ பணியின்போது, ராட்சத தூணுக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற தேஜஸ்வினி என்ற 28 வயது பெண், அவரது 2½ வயது மகன் விகான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அவரது கணவர் மற்றும் மற்றொரு குழந்தை காயங்களுடன் உயிர்தப்பினர்.

அதிகாரிகளின் அலட்சியம்

இந்த சம்பவம் குறித்து அறிந்த கோவிந்தபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்துக்கு மெட்ரோ அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என கூறப்பட்டது.

மேலும் காண்டிராக்டரின் அலட்சியப்போக்கும் இந்த விபத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் தாய்-மகன் உயிரிழந்தது குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

வல்லுனர்கள் குழு ஆய்வு

இதற்கிடையே ஐ.ஐ.டி. வல்லுனர்கள் குழு சார்பில் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கட்டுமான பணியின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவில்லை என்பதும், இதனால் மெட்ரோ பாதை தூணுக்கு அமைக்கப்பட்ட இரும்புகள் விழுந்து விபத்து நடந்ததும் தெரிந்தது.

மேலும் இதுதொடர்பான குற்றப்பத்திரிகையை ஆய்வு குழு சமர்ப்பித்தது. ஆய்வு குழு சமர்ப்பித்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் கோவிந்தபுரா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

1,100 பக்க குற்றப்பத்திரிகை

5 மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில் தற்போது போலீசார் ஐகோர்ட்டில் 1,100 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். மெட்ரோ தூண் விழுந்து விபத்துக்குள்ளானதற்கு கட்டுமான நிறுவன என்ஜினீயர்கள் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் என 11 பேரின் பெயர், விவரங்கள் மற்றும் விபத்துக்கான காரணம் பற்றி ஆய்வு குழு கூறிய தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.


Related Tags :
Next Story