மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து 23 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்


மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து 23 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
x

மத்தியபிரதேசத்தில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் பயணம் செய்தனர்.

இந்த பஸ் கர்கோன் மாவட்டத்தின் டோங்கர்கான் பகுதியில் உள்ள போரட் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் பஸ் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை நிறுத்த எவ்வளவோ முயற்சித்தார்.

ஆனால் பஸ் ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வறண்டுபோன போரட் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ் உருக்குலைந்துபோன நிலையில் அதன் இடிபாடுகளில் பயணிகள் சிக்கி நசுங்கினர்.

இந்த விபத்தை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு முதலுதவி சிகிச்சைகளை வழங்கினர்.

இதற்கிடையில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீவிர மீட்ப பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும் 3 சிறுவர்கள் உள்பட 23 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் சுமார் 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி இரங்கல்

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளர்.

பிரதமர் தனது இரங்கல் செய்தியில் "கர்கோனில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ரூ.6 லட்சம் நிவாரணம்

மேலும் அவர், "விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இது தவிர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.


Next Story