மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைதுசி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை


மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைதுசி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Aug 2023 10:15 PM GMT (Updated: 18 Aug 2023 10:15 PM GMT)

மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரியை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.

மும்பை,

மும்பையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ஹேமந்த் குமார். இவரை சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் நிதி ஆலோசகர் ஒருவர் ஜி.எஸ்.டி. வரி தீர்வு பிரச்சினை தொடர்பாக அணுகினார். அப்போது வரி தீர்வுக்காக தனக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் தருமாறு அதிகாரி ஹேமந்த் குமார் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக நிதி ஆலோசகர் சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். அப்போது அந்த நிறுவனம் லஞ்சம் கொடுக்க மறுத்ததுடன் சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்குமாறு நிதி ஆலோசகரை கேட்டுக்கொண்டது.

அதன்படி அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் அளித்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் யோசனைபடி அவர் ஜி.எஸ்.டி. அதிகாரி ஹேமந்த் குமாரை மும்பை வடாலா ரெயில் நிலையத்தில் சந்தித்து பேசினார். அப்போது நடந்த பேரத்தில் லஞ்ச தொகை ரூ.15 லட்சமாக குறைக்கப்பட்டது. இந்த பேரம் தொடர்பான உரையாடல்களை ரெக்கார்டு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார்.

இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். நிதி ஆலோசகர் ஜி.எஸ்.டி. அதிகாரியை நேரில் சந்தித்து முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்து கண்காணித்த சி.பி.ஐ. அதிகாரிகள், ஜி.எஸ்.டி. அதிகாரி ஹேமந்த் குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story