மைசூரு மாநில 3-வது சட்டசபை தேர்தல் - ஒரு கண்ணோட்டம்


மைசூரு மாநில 3-வது சட்டசபை தேர்தல் - ஒரு கண்ணோட்டம்
x

மைசூரு மாநிலத்தின் 3-வது சட்டசபை தேர்தல் 1962-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நடந்தது. 179 ஒரு உறுப்பினர் தொகுதிகளுக்கும், 29 இரு உறுப்பினர் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒரு உறுப்பினர் தொகுதியில் 27 தொகுதிகள் ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், ஒரு தொகுதி பழங்குடியினர் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தேர்தலில் 58 லட்சத்து 39 ஆயிரத்து 899 ஆண் வாக்காளர்களும், 55 லட்சத்து 13 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 892 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்திருந்தனர்.

இருப்பினும் தேர்தலில் ஆண் வாக்காளர்களில் 37 லட்சத்து 88 ஆயிரத்து 70 பேரும், பெண் வாக்காளர்களில் 29 லட்சத்து 99 ஆயிரத்து 286 பேரும் வாக்களித்தனர். மொத்தம் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றியது. 208 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 138 இடங்களில் வெற்றி பெற்றது. பிரஜா சமூக நீதிக்கட்சி 84 இடங்களில் போட்டியிட்டது. இதில் 20 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றியை பதிவிட்டது. 31 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 இடங்களிலும்,

9 இடங்களில் வேட்பாளரை நிறுத்திய சமூகநீதிக்கட்சி ஒரு இடத்திலும் வெற்றி அடைந்தன. சுதந்திரா கட்சி 59 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், பொது ஊழியர்கள் சங்கம் 17 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும், மகாராஷ்டிரா எகிகிரண் சமிதி 6 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதேப் போல் இந்த தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.வும், 63 இடங்களில் போட்டியிட்ட ஜனசங்கமும், 19 இடங்களில் போட்டியிட்ட குடியரசு கட்சியும் தோல்வியையே சந்தித்தன. மேலும் சுயேச்சைகள் 27 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டினர்.

138 இடங்களில் வெற்றியை ருசித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்று கூடி எஸ்.ஆர்.காந்தி என்பவரை முதல்-மந்திரியாக தேர்வு செய்தனர். அவர் 1962-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மொத்தம் 96 நாட்கள் மட்டுமே இந்த பதவியை வகித்தார். அதன் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக எஸ்.நிஜலிங்கப்பா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 முறை முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமை நிஜலிங்கப்பாவுக்கு கிடைத்தது.


Next Story