என்.ஆர்.புரா அருகே கிராமத்திற்குள் புகுந்துகாட்டு யானைகள் அட்டகாசம்


என்.ஆர்.புரா அருகே கிராமத்திற்குள் புகுந்துகாட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:45 PM GMT)

என்.ஆர்.புரா அருகே கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. வீட்டின் மேற்கூரை மற்றும் விளை பயிர்களை நாசப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு-

என்.ஆர்.புரா அருகே கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. வீட்டின் மேற்கூரை மற்றும் விளை பயிர்களை நாசப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பெத்தகொலே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெத்தகொலே கிராமத்திற்குள் 2 காட்டுயானைகள் புகுந்தது.

இந்த காட்டுயானைகள் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்திவிட்டு சென்றன. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து கிராமத்தில் இருந்து அருகே உள்ள தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை அங்கிருந்த விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனே இது குறித்து என்.ஆர்.புரா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், பட்டாசுகளை வெடித்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் துரத்தி அடித்தனர். இதையடுத்து கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் கிராம மக்களிடையேயான பீதி இன்னும் குறையவில்லை. இந்த காட்டுயானைகள் நடமாட்டத்திற்கு நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும் என்று அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.


Next Story