பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூருவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு:-

பிரவீன் நெட்டார் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவரை கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி மர்மநபர்கள் ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாநில பா.ஜனதா அரசுக்கு எதிராக அக்கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பலர் ராஜினாமா செய்தனர்.

இந்த சம்பவத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்து கொண்டு நடவடிக்கை எடுத்தது. மேலும் இந்த கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனால் பிரவீன் நெட்டார் கொலை வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு ஒப்படைத்தது.

என்.ஐ.ஏ. விசாரணை

அதன்படி என்.ஐ.ஏ. போலீசார் இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசாரும் கைது செய்யப்பட்டவர்களையும் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி மேலும் சிலரை கைது செய்தனர். அவர்களை பெங்களூருவில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்பு பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வந்தனர். மேலும் பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்பு கொண்டு தலைமறைவாக இருக்கும் 3 பேரை பிடிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் பெல்லாரேவை சேர்ந்த சாகீத் (வயது 40) என்பது தெரியவந்தது. இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சாகீத்தை பெங்களூருவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story