விமானம் தாமதம்: விமானியை தாக்கிய பயணி கைது


விமானம் தாமதம்: விமானியை தாக்கிய பயணி கைது
x

விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை விமானி வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

டெல்லி,

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

பனிமூட்டத்தால் வெளிச்சமின்மை காரணமாக பல்வேறு நகரங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. ஆனால், பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்பட 10 மணிநேரம் காலதாமதம் ஆனது. இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

பின்னர், மாலை 6 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. ஆனால், அப்போதும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமானம் புறப்படுவது மீண்டும் தாமதமானது. விமானம் புறப்பட தாமதமாவது குறித்து துணை விமானி அனுப்குமார் அறிவிப்பு வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

விமானம் மீண்டும் காலதாமதமாக புறப்படும் என்று அறிவித்ததால் ஆத்திரமடைந்த பயணிகளில் ஒருவர் விமானியின் அறைக்குள் புகுந்து விமானி அனுப்குமார் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய பயணியை விமான ஊழியர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தாக்குதல் நடத்திய பயணி சஹில் கதாரியா என்பது தெரியவந்தது. இதையடுத்து, சஹில் கதாரியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அதேவேளை, விமான ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story