ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் வழிநெடுக ஆதரவு அளிக்கும் கேரள மக்கள்


ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் வழிநெடுக ஆதரவு அளிக்கும் கேரள மக்கள்
x

திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம், கனியபுரம் பகுதியில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவனந்தபுரம்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

அன்று முதல் 10-ந் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அதன்பின்பு 11-ந் தேதி முதல் அவர் கேரள மாநிலத்தில் நடைபயணம் தொடங்கினார். கேரளாவில் இன்று 3-வது நாளாக அவரது நடைபயணம் நடக்கிறது. திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம், கனியபுரம் பகுதியில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி வழி நெடுக கூடி நின்ற மக்களை பார்த்து கையசைத்தபடி உற்சாகமாக நடந்தார்.

இந்த பாதயாத்திரையில் பங்கேற்கவும், ராகுலை வரவேற்கவும் இன்று ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்றனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், ராகுலை பாராட்டியும் கோஷங்கள் எழுப்பினர். ராகுல் காந்தியின் இன்றைய பாத யாத்திரையில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர். இது தமிழகத்தில் அவர் பாத யாத்திரை மேற்கொண்டபோது இருந்த கூட்டத்தை விட மிக அதிகமாகும்.

ராகுல் காந்தி இன்று மாமம் பூஜா ஆடிட்டோரியத்தில் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கல்லம்பலம் சென்றடைகின்றனர்.

இரவு அங்கு தங்கும் ராகுல் காந்தி நாளை காலை கொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணம் சென்றடைகிறார். அதன்பின்பு அவர் கொல்லம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து இம்மாதம் இறுதி வரை கேரளா முழுவதும் 7 மாவட்டங்களில் 19 நாட்கள் பயணம் செய்ய உள்ளார்..


Next Story