கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற திட்டம்- பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற திட்டம் என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இல்லை. அக்கட்சி பலவீனம் அடைந்துவிட்டது. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு முக்கியத்துவம் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டசபைகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இமாசலபிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும். அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவே வெற்றி பெறும். கர்நாடகத்திலும் எங்கள் கட்சியே வெற்றி பெறும். 150 தொகுதிகளில் வெற்றி பெற நாங்கள் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. மக்கள் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள். மந்திரிகள் அனைவரும் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் திட்டங்களை மக்கள் பாராட்டுகிறார்கள்.
இவ்வாறு அருண்சிங் கூறினார்.