மக்களிடம் இருந்து விலகி சென்றுவிட்டார் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி


மக்களிடம் இருந்து விலகி சென்றுவிட்டார் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 15 April 2024 12:52 PM IST (Updated: 15 April 2024 2:20 PM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும்தான் நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய 2 பிரச்சினைகள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

பிரதமர் மோடியால் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், அவர் மக்களிடம் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள ஜலோரில் முதல்-மந்திரி அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட்டை ஆதரித்து நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது,

"உங்களின் மிகப்பெரிய பிரச்சினையே விலைவாசி உயர்வுதான். ஆனால் உங்களின் பிரச்சினைகளை பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். ஒருவர் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வைத்திருக்கும்போது, அவரிடம் மக்கள் உண்மையை சொல்லமாட்டார்கள். அதைப்போலத்தான் பிரதமரை சுற்றியிருக்கும் அதிகாரிகளும், அவரது சகாக்களும் கள நிலவரத்தை அவரிடம் கூறுவதற்கு அஞ்சுகின்றனர். இதனால் மக்களிடம் இருந்தும் அவர்களின் பிரச்சினைகளில் இருந்தும் பிரதமர் மோடி முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டார்.

விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும்தான் நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய 2 பிரச்சினைகள். ஆனால் யாரும் அவற்றுக்கு செவிமடுக்கவில்லை. ஜி20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும்போது நாம் பெருமை அடைகிறோம். ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், நாட்டின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள், வேலையின்மை காரணமாக இளைஞர்கள் திண்டாடுகிறார்கள்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா ஊழலுக்கு எதிராக போராடவில்லை. அதன் வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை. அது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு மட்டுமே விரும்புகிறது." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story