திருப்பதியில் பக்தர்களிடம் நகை, பணம் திருடிய 3 பெண்களை கைதுசெய்த போலீசார்
பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டனர்.
திருப்பதி,
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் அடிக்கடி திருட்டு போனது.
இதுகுறித்து பக்தர்கள் அங்குள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமலை பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சாய்நாத் சவுத்ரி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பக்தர்கள் பஸ்சில் கூட்டமாக ஏறுவதை பயன்படுத்தி 3 பெண்கள், பெண் பயணி ஒருவரின் பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை திருடியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த வசந்தா, கவுரம்மா, மஞ்சுளா என தெரியவந்தது. இவர்கள் பாலாஜி பஸ் நிலையம், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 93 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி, செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.